Saturday, May 1, 2021

காதலும் இருவாட்சியும்



பறவைகளின் காதலை எந்தப் புனைவும் இல்லாமல் எழுதவேண்டுமானால் இருவாச்சி  பறவையை பற்றித்தான் எழுதவேண்டும். இரைத் தேடுவதில் ஆரம்பித்து இளைப்பாறுவது வரை எங்குச் சென்றாலும் ஆண் பறவையும் பெண் பறவையும் இணைந்தே செல்கின்றன. காதலாகி கருவாகிற இனப்பெருக்க காலத்தில் இருபறவைகளும் அடர்வனத்தில் இருக்கிற மரக்கூடுகளை தேடி அலையும். இயற்கையாக இருக்கும் மரப்பொந்துகள்தான் இப்பறவைகளின்  கூடு.

தலைவன் தலைவியை பிரிகிற இந்த இனப்பெருக்க காலத்தில் பெண் பறவை தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த மரப்பொந்துக்குள் போய்விடுகிறது. கூட்டுக்குள் போகின்ற பெண் பறவை தன் இறகுகளை உதிர்த்து மெத்தை போல செய்துகொள்கிறது. ஆண் பறவை, பெண் பறவை இருக்கிற பொந்தை தன்னுடைய எச்சில், ஈரமான மண் மற்றும் மரச்சிதைவுகளைக் கொண்டு மூடி விடுகிறது. உணவு கொடுப்பதற்கு மட்டும் சிறு துவாரம் ஒன்றை உருவாக்குகிறது. இனப்பெருக்க காலத்தில் ஆண் பறவை இரை தேடிச் சென்றுவிடுகிறது. பெண் பறவை சிறகுகளை இழந்து, தன்னுடைய இயற்கைப்  பொலிவை இழந்து வயிற்றில் முட்டையுடன் இனப்பெருக்கத்துக்குக் காத்திருக்கிறது. இரை தேடி திரும்புகிற ஆண் பறவை தன் அலகுகளுக்குள் சேமித்து வைத்திருக்கிற உணவை அந்தக் கூட்டின் துவாரம் வழியாகப் பெண் பறவைக்கு ஊட்டிவிடுகிறது.

மற்ற காலங்களில் பழங்கள் பூச்சிகள் என உண்ணும் பெண் பறவை இனப்பெருக்க காலத்தில் மற்றப் பறவைகளின் குஞ்சுகள், சிறு பிராணிகளை உணவாகக் கொள்கிறது. தலைவியைப் பிரிந்த தலைவன் இனப்பெருக்ககாலத்தின் எல்லா நாள்களிலும் கூடு இருக்கிற மரத்திலேயே தங்கியிருக்கும். இரண்டிலிருந்து மூன்று முட்டைகள் வரை இடுகின்ற பெண்பறவை ஏழு வாரங்கள் வரை அதை அடைகாக்கிறது. 

முட்டையில் இருந்து குஞ்சிகள் வெளி வருகிற வரை தாய்ப்பறவைகளின் தியாகம் மெய்சிலிர்க்க வைக்கிறது. குஞ்சுகள்  பிறந்ததும் கூடை உடைக்கிற ஆண் பறவை, பெண் பறவையை வெளியே கொண்டுவருகிறது. இரண்டு மாதங்களாகக் கூட்டுக்குள் அடைந்து கிடக்கிற பெண் பறவைக்கு பறக்கிற ஆற்றல் குறைகிறது. ஏற்கெனவே இறகுகளை இழந்த பறவை பத்திலிருந்து இருபது நாள்களுக்குப் பறப்பதற்கு சிரமப்படுகிறது. அக்காலங்களில் ஆண் பறவை குடும்பத்துக்கான உணவைக் கொண்டு வந்து கொடுக்கிறது. அப்போது இப்பறவைகள் தவளை, ஓணான், சிறிய வகை பாம்புக் குட்டிகள் போன்றவற்றை உணவாகக் உட்கொள்கின்றன. தனித்துப் பறக்கிற காலம் வரும் வரை தாய்ப்பறவைகளின் பராமரிப்பில்  குஞ்சுகள் வளர்கின்றன. அன்பிருக்கிற இடங்களில் ஆபத்தில்லாமல் இல்லை. இரைதேடி செல்கிற ஆண் பறவை ஒருவேலைக் கூடு திரும்பவில்லை என்றால் கூட்டில் இருக்கிற பெண் பறவை உயிர் விடுவதைத் தவிர வேறு வாய்ப்பே இல்லை. குஞ்சுகளோடு இருக்கும்போது இது நிகழ்ந்தாலும் முடிவு மரணம் மட்டுமே. 


இருவாட்சி என்பது இருவாச்சி இனப்பறவைகளின் குடும்பப்பெயர் ஆகும். இக்குடும்பத்தை "ஹார்ன்பில்" Horn bill என அழைக்கிறார்கள். இவை அளவில் சற்று பெரிதானவை. பறக்கும்போது ஹெலிகாப்டர் பறப்பதைப் போல இருக்கும். அதேபோல ஒலி எழுப்பக்கூடியவை. பெரிய அலகை உடையவை. அலகுக்கு மேலே கொண்டை போன்ற அமைப்பு இருக்கும். இவை சுமார் 30 முதல் 40 ஆண்டுகள் வாழக்கூடியது. உலகம் முழுவதும் 54 வகை இருவாச்சிகள் இருக்கின்றன. இந்தியாவின் மேற்குத்தொடர்ச்சி மலைகள், அருணாசலப்பிரதேசம், அந்தமான் தீவுகள், நேபாளம் ஆகிய இடங்களில் வாழ்கின்றன.  இந்தியாவில் 9 வகை இருவாச்சிகள் உள்ளன. தென்னிந்தியாவில் 4 வகை இருவாச்சிகள் காணப்படுகின்றன. மேற்குத்தொடர்ச்சி மலைகளில் காணப்படும் நான்கு வகை இருவாச்சிப்பறவைகள் பெரும்பாத இருவாட்சி, மலபார் இருவாட்சி , சாம்பல் நிற இருவாட்சி . கேரள மாநிலத்தில் இருவாச்சியை  மாநிலப் பறவையாக அறிவித்துள்ளனர்.  






இருவாட்சிப் பறவைகள் உட்கொண்டு வெளியேற்றும் எச்சத்தில் உள்ள தாவர விதைகள் உயிர்ப்புத்தன்மைமிக்கவை. இப்பறவைகள் எச்சங்களால்தான் காட்டில் இருக்கிற மரங்கள் பெருகுகின்றன. இப்பறவைகள் இருக்கிற காடுகளை மழைக்காடுகள் என அழைக்கிறார்கள். மழைக் காடுகள் இல்லையென்றால் இருவாட்சி பறவைகளும் இல்லை எனப் பறவை ஆர்வலர்கள் கருதுகின்றனர். காடு வளர்வதற்கு முக்கிய காரணியாக இப்பறவைகள் இருக்கின்றன. இப்பறவைகள் இப்போது அருகி வரும் இனமாக ஐ.நா.வால் அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் மரங்கள் வெட்டப்படுவதால், இருவாட்சிப் பறவைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதாகப் பறவை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். மிகவும் உயரமான மரங்களில் வசிக்கும் இருவாட்சி பறவைகள், மரங்கள் அழிக்கப்படுவதன் காரணமாக தன் இனத்தைப் பெருக்கிக்கொள்ள முடியாமல் தவிக்கின்றன. இருவாட்சி பறவை இனம் அழிந்தால் மேற்குத் தொடர்ச்சி மலையில் இருக்கும் பத்து வகை மரங்கள் அழிந்து விடும் என்கிறார்கள் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் 





ஒன்றை இழந்த பிறகு அவை  இல்லை இல்லை என வருந்துவதை விட அவை இருக்கும்போது  பாதுகாப்பதே  சிறந்தது இல்லையா?



                                                     
 பிரபஞ்சன்கருப்புசாமி

2 comments:

Great hornbills are arboreal and live mainly in wet, tall, evergreen forests. Old-growth trees that extend beyond the height of the canopy a...